சத்குரு:
நீங்கள் யோகா செய்யும்போது, அதிகப்படியான எடை கண்டிப்பாகக் குறைந்துவிடும். யோகா ஓர் உடற்பயிற்சியாக மட்டும் செயல்படுவதில்லை. அது உங்கள் அமைப்புகளுக்கு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடாமல் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டு வருகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு விழிப்புத்தன்மை வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும்தான் உடல் உண்ணும். அதற்கு மேல் எதையும் அது உண்ணாது. மற்ற உடற்பயிற்சிகளையோ அல்லது உணவுத் திட்டங்களையோ கடைப்பிடித்தால், எப்போதும் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் யோகப் பயிற்சிகள் செய்து வரும்போது, உங்களை நீங்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும். நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக் கொள்கிறது. இதுதான் யோகாவில் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமும் நன்மையும்.
யோகா எல்லா மதங்களுக்கும் முற்பட்டது. மனித மனதில் மதம் என்ற சிந்தனையே துவங்கியிருக்காத போதிலிருந்தே யோகா இருக்கிறது.-
சத்குரு:
யோக கலாச்சாரத்தில் சிவன் கடவுளாக பார்ககப்படுவதில்லை. முதல் யோகி - ஆதி யோகியாகவே பார்க்கப்படுகிறார். சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இமாலய பர்வதத்தில் ஒரு யோகி தோன்றினான். அவன் யார், எங்கிருந்து வந்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை. பரவசத்துடன் அசைவின்றி அமர்ந்திருப்பவன் நடனமாட துவங்கி, பரவசத்தின் உச்சமடைந்து மீண்டும் அசைவின்றி அமர்ந்திடுவான். ஏதோ அதிசயம் எதிர்பார்த்து கூடிய கூட்டம் நாட்கணக்கில் அசைவின்றி அமர்ந்திருந்த யோகியை விட்டு விலகியது. உணவு, ஓய்வு, கழிவு என உடலின் கட்டுப்பாடுகளை தாண்டி அசைவற்றிருப்பதே ஒரு அதிசயம் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் எழுவர் மட்டும் யோகியை தொடர்ந்தார்கள், தங்களுக்கும் ஏதாவது கற்றுத்தர வேண்டினார்கள். பல நாட்களுக்குப்பின் மனமிரங்கிய ஆதியோகி, தயார் செய்யும் ஆசனங்களை வழங்கிவிட்டு பரவசநிலையை தொடர்ந்தான்.
சூரியனின் கதிர் பூமியின் வடபாகத்திலிருந்து தென்பாகம் (உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்திற்கு) திரும்பிய முதல் பௌர்ணமியன்று ஆதியோகியின் அருட்பார்வை எழுவரின் மீதும் பதிந்தது. 84 ஆண்டு சாதனாவில் கனிந்து, ஞானத்தை பெற முழு தகுதியுள்ளவர்களாக, ஆதியோகியால் மேலும் புறக்கணிக்க முடியாதவர்களாக எழுவரும் அமர்ந்திருந்தார்கள். 28 நாட்கள் கூர்ந்து கவனித்தவர், அடுத்த பௌர்ணமியன்று குருவாக அருள் பாலிக்க முடிவெடுத்தார். அந்நன்னாள்தான் குரு பௌர்ணமி.
முதல் யோகி -ஆதியோகி - முதல் குருவாக - ஆதிகுருவாக தென்திசை நோக்கி அமர்ந்ததால் தக்ஷிணாமூர்த்தி என்றும் அழைக்கிறோம். ஆதியோகியின் ஞானத்தை யோக விஞ்ஞானமாக உலகெங்கும் சேர்த்த ஏழு தீவிர சாதகர்களையும் சப்தரிஷிகள் என்று வழங்குகிறோம்.
ஆதியோகியான சிவனே யோகாவிற்கு மூலமானவர் என்பதை இந்த உலகம் அறிய வேண்டும் எனபதே நம் விருப்பம்.-சத்குரு
யோக விஞ்ஞான பரிமாற்றம் நிறைவுற்றதும், உலகமக்கள் அனைவருக்கும் இதை வழங்க சப்தரிஷிகளை பணித்தார் ஆதியோகி. கலைகளிலும் அறிவியலிலும் வல்லவர்களாக விளங்கிய சப்தரிஷிகள் அந்த யுகத்தின் நாகரீகங்களையும் அறிவியல் மேம்பாட்டையும், சிகிச்சை முறைகளையும் வடிவமைத்தார்கள்.
சித்த வைத்தியம், ரசவைத்தியம் ஆகியவற்றின் தந்தையென்று கருதப்படுபவரும், இந்திய தீபகற்பத்தின் தென்பகுதிக்கு வந்துசேர்ந்தவருமான அகஸ்த்திய முனிவர் நமக்கு மிகமிக முக்கியமானவர். அன்றைய மனித குடியிருப்பு அனைத்தையும் தொட்ட இவரது செயல், ஒரு கோட்பாடாகவோ, தத்துவமாகவோ, பயிற்சியாகவோ இல்லாமல் ஒருவர் அமரும் விதம், உண்ணும் விதம், என அன்றாட வாழ்க்கைமுறையோடு ஒரு அங்கமாக ஆன்மீகத்தை இரண்டறக் கலந்துவிட்டது.
அகஸ்தியர் வழங்கிய முறைகளை பின்பற்றித்தான் நெருப்புக் குழம்புகள் போல் நூற்றுக்கணக்கான யோகிகள் இந்தியாவில் தோன்றினர்.
சத்குரு:
பெரும்பாலானோர் நினைப்பதைப் போல யோகாவின் மூலம் பதஞ்சலி அல்ல. அவர் வருவதற்கு முன்பே 1800 விதமான பள்ளிகள் உருவாகி, வளர்ந்து இருந்தன. அந்த நேரத்தில் 1800 விதமான யோகா, இந்தியாவில் இருந்தது.
1800 யோக வகைகள் தவறானது அல்ல, ஆனால், நடைமுறை சாத்தியம் இல்லாதது. ஏனென்றால் ஒவ்வொன்றும் தனித்தனியாக நிபுணத்துவமான பிரிவுகளாக வளர்ந்திருந்தது. பதஞ்சலி வந்தபோது இந்த அளவிட முடியாத அறிவை கண்டார். அவர் இதனை சில சூத்திரங்களாக்கி, எட்டு அங்க யோகமாக, எல்லோரும் உணரும் விதமாக மாற்றினார்.
பதஞ்சலி ஒரு சந்நியாசி என்பதை விட ஒரு விஞ்ஞானியாய் இருந்தார். 1800 யோக வகைகளை 200 யோக சூத்திரங்களாக அவர் வழங்கிய வழியே இன்று நடைமுறையில் உள்ளது. 'சூத்ரா' என்ற பதம் இங்கே கயிறு அல்லது நூல் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. 200 சூத்திரங்களில் 1800 யோக வகைகளும் அடங்கும்படி ஒரு மாலையாக பதஞ்சலி தொடுத்தார். இதனால், ஒவ்வொரு நோக்கத்திற்காகவும் ஒவ்வொரு யோகாசனங்களை ஒருவர் செய்ய வேண்டிய நிலையிலிருந்து, ஏதாவது ஒரேயொரு யோகாசனம் மட்டுமே பயிற்சி செய்தாலே முழுமையான பலன் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.