Jan 162023

பெண்ணியம் (Feminism)

பெண்ணியம் (feminism) என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.

பெண் உரிமை லட்சினை

சமத்துவமின்மையின் மூலங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையாளங்களான ஆண் - பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உள்ளன.

தற்காலப் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை இன, சமூக, கலாசார, மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகக் கருதுகின்றனர். ஒரு வினைத்திறன்மிக்க பெண்ணிய இயக்கமானது வன்புணர்ச்சி, தகாப்புணர்ச்சி, பாலியற் தொழில் போன்ற பொதுப்பிரச்சினைகளையும் குறித்த சமூகங்களுக்குரிய சிறப்புப் பிரச்சினைகளையும் கவனத்திலெடுக்க வேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

Feminism என்னும் ஆங்கிலச் சொல் Femina எனும் இலத்தீன் மொழியிலிருந்து உருவானது. இதன் பொருள் பெண்மைக்குரிய இயல்புகளை உடையவள் என்பதாகும். இச்சொல் தமிழில் பெண்ணியம், பெண்ணிலைவாதம், பெண் நிலை ஏற்பு, மகளிரியல், பெண் நலக்கொள்கை ஆகிய சொற்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

 

பெண்ணியம் என்ற சொல் நடப்பில் நிலைபெற்று விட்டது என்பதாலும், கருத்துக் குழப்பத்திற்கு இடம் தராமல் தெளிவாக உள்ளதாலும் பெமினிசம் என்கிற ஆங்கிலச் சொல்லின் தமிழ் இணைச் சொல்லாக இது வழங்கப்பட்டு வருகிறது. பெமினிசம் என்பதற்கு பெண்ணியம் என்பதே பொருத்தமான கலைச் சொல்லாகும்