Jan 272023

சுந்தரமூர்த்தி நாயனார்.

சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரும், 63 நாயன்மார்களில் 'ஆதிசைவர்' குலத்தைச் சேர்ந்தவருமாவார்.

சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும்  சமயக்குரவர்  நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார். பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினைச் 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பர்.திருமணத்தினைத் தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார்
பெயர்: சுந்தரமூர்த்தி நாயனார்
குலம்: ஆதி சைவர்
பூசை நாள்: ஆடிச் சுவாதி
அவதாரத் தலம்: திருநாவலூர்
முக்தித் தலம்: திருவஞ்சைக்களம்
நால்வர்
தலைப்புகள்/விருதுகள் நாயன்மார்சமயக்குரவர்
தத்துவம் சைவ சமயம் பக்தி நெறி

இவர் வாழ்ந்தது எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.இவர் பாடிய தேவாரங்கள், 7-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருதொண்டர் தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார் பெரிய புராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.

சுந்தரர் தேவாரம்

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களைச் 'சுந்தரர் தேவாரம்' என்று அழைக்கின்றனர். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் அழைப்பது வழக்கம்.இப்பாடல்களைப் பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38,000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால், பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.தேவாரங்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல் பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களைத் ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.

மிகுதி அடுத்த வாரம்...