Jan 302023

அகத்திணைப் பாகுபாடு

இப்பகுதி என்ன சொல்கிறது?

* தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாகுபாட்டைப் பற்றி விளக்கிக் கூறுகிறது.

* திணை என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை பிரிக்கப்பட்டதையும் இது விளக்கியுரைக்கிறது.

* அகத்திணை வகைகளையும், அகத்திணைக்கு இணையான புறத்திணைகளையும் பற்றிக் கூறுகின்றது.

* களவியல் என்பதையும், கற்பியல் என்பதையும் விளக்குகின்றது.

* அகத்திணையால் உணரப்படும் பண்டைய பண்பாட்டையும் விளக்குகின்றது.

 

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

• திணைகள் என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை என்ற பிரிவிற்கான காரணத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

* அகத்திணையில் உள்ள வகைகளையும், களவியல் கற்பியல் பிரிவுகளையும் விளங்கிக் கொள்ளலாம்.

* அகத்திணையால் உணர்த்தப்படும் பண்டைய பண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

 


2500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தொல்காப்பியர், தான் எழுதிய தொல்காப்பிய இலக்கண நூலினை மூன்று அதிகாரங்களாகப் பகுத்தார் என்பதை அறிந்திருப்பீர்கள். எழுத்துகள் பிறந்தது முதல் அவை ஒன்றோடு ஒன்று இணைந்து மொழியாகும் தன்மைகளைக் கூறுவது எழுத்ததிகாரம். இவ்வெழுத்துகள் சொல்லாகி, அச்சொற்கள் அமையும் பாகுபாடுகள், அவற்றின் பெயர் வகைகள் முதலியவற்றைக் கூறுவது சொல்லதிகாரமாகும். இச்சொற்கள் இணைந்து பல்வேறு பொருள்களை உணர்த்தும். இது பொருளதிகாரம் என்று அழைக்கப் பெறுகிறது. பொருள் என்றவுடன் உடனே நாம் உணரும் செய்தி நம் உடைமைப் பொருள்களைத்தான். ஆனால் தொல்காப்பியர் பொருள் என்பதற்கு நம் உடைமைப் பொருளைக் குறிக்கவில்லை. அவர் வாழ்வியல் நிலைகளைக் குறிக்கின்றார். வாழ்வியல் நிலைகளை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார். இவை பற்றிய விளக்கங்கள் தொல்காப்பியரின் அகத்திணையியலில் வருகின்றன. இவ்வகத்திணை இயல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் முதல் இயலாகும்.

 

தொல்காப்பியரின் பொருளதிகாரம்

பொருளதிகாரம் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

1. அகத்திணையியல்

2. புறத்திணையியல்

3. களவியல்

4. கற்பியல்

5. பொருளியல்

6. மெய்ப்பாட்டியல்

7. உவமவியல்

8. செய்யுளியல்

9. மரபியல்

என்று ஒன்பது இயல்களாகும். இவற்றுள் அகத்திணையியல் களவியல், கற்பியல் ஆகியவை அகத்திணை பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பொருளியல் என்பது அகத்திணை பற்றிய செய்திகள் சிலவற்றையும், புறத்திணைக்குரிய செய்திகள் சிலவற்றையும் கூறுகின்றது. மெய்ப்பாட்டியல் எட்டுவகை மெய்ப்பாடுகளைக் கூறுகின்றது. மெய்ப்பாடு என்பது உடம்பில் தோன்றும் உணர்வுகளாகும். உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள், அவ்வுள்ளத்தில் இருந்து எவ்வாறாவது வெளிப்பட்டு விடும். அதுவே மெய்ப்பாடாகும். உவமையியல் இரண்டு பொருள்களுக்கிடையே காணும் ஒப்புமைத் தன்மைகளைக் கூறுகின்றது. செய்யுளியல் செய்யுள் இலக்கணத்தையும், மரபியல் தமிழில் பழைய காலந்தொட்டு இருந்து வரும் சொற்பொருள் மரபு பற்றியும், முறைமைகள் பற்றியும் கூறுகின்றன.

 

தொல்காப்பியர் கூறும் திணைப்பாகுபாடு

திணைகளை அகம், புறம் என்று பிரித்த தொல்காப்பியர், அகத்திணையை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பார். அவை

1. குறிஞ்சி

2. முல்லை

3. மருதம்

4. நெய்தல்

5. பாலை

6. கைக்கிளை

7. பெருந்திணை

எனப் பெயரிடப்பட்டன. தொல்காப்பிய அகத்திணையியலின் முதல் நூற்பா அகத்திணையைப் பற்றிக் கூறும் போது,

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப

என்கிறது. திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்படும். அகமாவது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் தமக்குள்ளே கண்டு, காதல் கொண்டு ஒன்றுபடுதல்; சில காரணங்களால் பிரிதல்; பிரிந்து தனித்திருத்தல்; அத்தனிமைக்கு இரங்குதல்; சில நேரங்களில் பிணக்குக் கொள்ளுதல் என ஐந்துவகை அன்பு உரிப்பொருளைக் கொண்டுள்ளது. இவற்றைக் கூடல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பர். இவை குறிஞ்சி, பாலை, முல்லை , நெய்தல், மருதம் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

​​​​மிகுதி அடுத்த வாரம்...