Jan 312023

அறத்துப்பால் -இல்லறவியல் - விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

 

பரிமேலழகர் உரை:

[அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடைநின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின்பின் வைக்கப்பட்டது.)

 

இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.).

Translation:

All household cares and course of daily life have this in view. 

Guests to receive with courtesy, and kindly acts to do.

Explanation:

The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.