ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பது முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது. தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும். கடலில் மீன் பிடிக்கச் சென்றோ , பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றலை நெய்தல் திணை என்பர்.
தன் ஊரிலே வறட்சியின் காரணமாக வெளியூர் சென்று பொருளீட்டி வரலாம் என்று தலைவன் பிரிந்து செல்லும் நேரத்தில் இல்லத்தில் இருக்கும் தலைவியின் நிலை குறித்து அவன் கவலைப்படுதலும், செல்லும் வழியில் தலைவனுக்கு என்ன நேருமோ என்று தலைவி இல்லத்தில் இருந்து கவலைப்படுதலும் பாலைத் திணை எனப்படும். இவையே அன்பின் ஐந்திணை என்றும் அழைக்கப்படும்.
ஆண் விரும்பி, பெண் விரும்பாமலோ அல்லது பெண் விரும்பி, ஆண் விரும்பாமலோ இருப்பின் அது கைக்கிளை. அதாவது ஒரு தலைக் காமம். காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ, பெண்ணைவிட ஆண் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது பெருந்திணை என்று பெயர் பெறும். இது பொருந்தாக் காமம். கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் தமிழ்ச் சான்றோர்களால் போற்றப்படாத ஒழுக்கங்களாகும். ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்ற ஐந்திணைகள் மட்டுமே அன்பின் ஐந்திணை என்று போற்றப்பட்டது.
தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறும்போது, அவற்றிற்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை விளக்கியுரைக்கின்றார்.
முதற்பொருள் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும் நிலமும் பொழுதும் ஆகும்.
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (4)
என்று தொல்காப்பிய நூற்பா கூறும். நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை , குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5)
என்றுரைக்கின்றார், தொல்காப்பியர். முல்லை நிலத்தை 'மாயோன் மேய காடுறை உலகம்' என்றார். காடும், காட்டைச் சார்ந்த இடமும் என்று கூறி, அக்காட்டிற்கு உரிய தெய்வமாகத் திருமாலை மாயோன் என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். குறிஞ்சி நிலத்தை மலையும், மலையைச் சார்ந்த இடமும் என்று கூறி, அம்மலைக்கு உரிய தெய்வமாக முருகனைக் கூறுகிறார். 'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' எனக் கூறுவது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தையே ஆகும். இந்திரனுக்கு வேந்தன் என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்திரனே வயலும் வயலைச் சார்ந்த இடத்திற்குக் கடவுளாகும். 'வருணன் மேய பெருமணல் உலகமும்' என்று கூறுவது மணல் மிகுந்திருக்கக் கூடிய கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். இந்த நிலத்திற்குக் கடவுளாக வருணன் உரைக்கப்படுகிறான். பாலைத் திணை என்பது பாலைவனப் பகுதியாகும். இதற்கான தெய்வத்தைத் தொல்காப்பியர் கூறவில்லை. தமிழ்நாட்டில் பாலைநிலம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். பாலை என்ற நிலம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் காலத்தால் சற்றுப் பிற்பட்ட சிலப்பதிகாரம் தான் சொல்கிறது. முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
(காடுகாண் காதை, 64-66)
என்று கூறுகிறது. இப்பாலை நிலத்திற்குக் கடவுள் கொற்றவை எனத், தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் கூறுகிறார். நிலங்களுக்கு இடமும், கடவுளும் கூறிய தொல்காப்பியர் அந்நிலங்களுக்குரிய காதல் ஒழுக்கங்களுக்கு ஏற்ற வண்ணம் பெரும் பொழுது, சிறுபொழுதுகளைக் கூறுகிறார். பெரும்பொழுது என்றால் ஓர் ஆண்டை இரண்டிரண்டு மாதங்களாக - ஆறு பிரிவுகளாகப் பிரித்து அமைத்துக் கொள்வதாகும்.இவை
1. கார்காலம்
2. கூதிர்காலம்
3. முன்பனிக் காலம்
4. பின்பனிக் காலம்
5. இளவேனிற் காலம்
6. முதுவேனிற் காலம்
என ஆறுவகைப்படும். சிறுபொழுது என்பது ஒரு நாளை ஆறு பிரிவுகளாகப் பிரித்துக் கணக்கிடப்படும் காலமாகும். இது
1. வைகறை
2. விடியல்
3. நண்பகல்
4. எற்பாடு (பிற்பகல்)
5. மாலை
6. யாமம் (நள்ளிரவு)
எனப் பிரிக்கப்படும். (எற்பாடு - எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு - இளம்பூரணர் உரை, தொல்.பொருள்.