Feb 202023

அகத்திணைப் பாகுபாடு

சென்ற வார தொடர்ச்சி..

கருப்பொருள்

மேலே குறித்த நிலம் முதலிய இடத்தாலும் காலம் முதலியவற்றாலும் தோற்றம் கொள்ளும் பொருள்களைக் கருப்பொருள் என்று குறிப்பிடுவர். அவை தேவர் என்றும், மக்கள் என்றும், விலங்கு என்றும் பலவாறு பகுக்கப்படும். அங்கு வாழும் மக்கள் உண்ணுகின்ற உணவு, செய்கின்ற தொழில் இவையும் கருப்பொருளாகும். ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வங்கள், உணவு வகைகள், மரங்கள், பறவைகள், செய்தொழில்கள், யாழ் போன்ற இசைக் கருவிகள் எல்லாம் கருப்பொருள் என்பதில் அடங்கும்.

உரிப்பொருள்

மக்களுக்கு உரிய பொருள் உரிப்பொருள் எனப்படும். இதனை ஒழுக்கம் என்பர். இது அக வாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் உரியது. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவற்றோடு கைக்கிளை, பெருந்திணை ஆகியவை சேர்ந்து ஏழும் அகத்திணைக்குரிய உரிப்பொருள்களாகக் கொள்ளப்படும்.

1. வெட்சி

2. வஞ்சி

3. உழிஞை

4. தும்பை

5. வாகை

6. காஞ்சி

7. பாடாண்

ஆகிய ஏழும் புறத்திணைக்கு உரியனவாகும்.

அகத்திணைகளுக்கு உரிய புறத்திணைகள்

அகப்பொருளில் கூறப்பட்ட முதற்பொருளும், கருப்பொருளும் புறப்பொருள் இலக்கியத்திற்கும் பொருந்துவனவாகும். ஒவ்வொரு புறத்திணையும் ஓர் அகத்திணையோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அவை கீழ்க்காணுமாறு தொடர்புபடும் எனத் தொல்காப்பியர் கூறுவார்.

அகத்திணை

புறத்திணை

குறிஞ்சி

வெட்சி

முல்லை

வஞ்சி

மருதம்

உழிஞை

நெய்தல்

தும்பை

பாலை

வாகை

கைக்கிளை

பாடாண்

அகத்திணையியலும் அன்பின் ஐந்திணைகளும்

அகத்திணை அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை எனப்படும். அன்பின் ஐந்திணைகளாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைக் காணலாம்.

குறிஞ்சித் திணை.

முதற்பொருள்

நிலம் - மலையும் மலையைச் சார்ந்த இடமும்

பொழுது - அ) பெரும்பொழுது – கூதிர்காலமும், முன்பனிக்காலமும், ஆ) சிறு பொழுது - யாமம்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - சேயோன்

2. உணவு - ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி, கிழங்கு

3. விலங்கு - புலி, யானை, கரடி, பன்றி

4. மரம் - அகில், ஆரம், தேக்கு, வேங்கை

5. பறவை - கிளி, மயில்

6. பறை - முருகியம், தொண்டகப் பறை

7. தொழில் - தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை விதைத்தல், வேட்டையாடுதல்

8. யாழ் - குறிஞ்சி யாழ்

9. பண் - குறிஞ்சிப் பண்

10. ஊர் - சிறுகுடி, குறிச்சி

11. நீர் - அருவி நீர், சுனை நீர்

12. மலர் - காந்தள், வேங்கை , குறிஞ்சி

உரிப்பொருள்

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)

முல்லைத் திணை

முதற்பொருள்

நிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும்

பொழுது - அ) பெரும்பொழுது : கார்காலம், ஆ) சிறுபொழுது: மாலை

கருப்பொருள்கள்

1. தெய்வம் - மாயோன்

2. உணவு - வரகு, சாமை

3. விலங்கு - மான், முயல்ம்

4. மரம் - தோன்றி, காயா, பிடவம், குருந்தம்

5. பறவை - காட்டுக்கோழி, சேவல்

6. பறை - ஏறுகோட் பறை

7. தொழில் - ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்

8. யாழ் - முல்லை யாழ்

9. பண் - குறிஞ்சிப் பண்

10. ஊர் - பாடி, சேரி

11. நீர் - குறுஞ்சுனை, கான்யாறு

12. மலர் - முல்லை , குல்லை , தோன்றி, பிடவம்

உரிப்பொருள்

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

மருதத் திணை

முதற்பொருள்

நிலம் - வயலும் வயல்சார்ந்த இடமும்

பொழுது - அ) பெரும் பொழுது - ஆண்டு முழுதும், ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - இந்திரன் (வேந்தன்)

2. உணவு - செந்நெல், கரும்பு

3. விலங்கு - எருமை, நீர்நாய்

4. மரம் - வஞ்சி, காஞ்சி, மருதம்

5. பறவை - தாரா, நீர்க்கோழி

6. பறை - மணமுழவு, நெல்லரி கிணை

7. தொழில் - விதைத்தல், விளைத்தல்

8. யாழ் - மருத யாழ்

9. பண் - மருதப் பண்

10. ஊர் - ஊர்கள்

11. நீர் - ஆற்றுநீர், பொய்கை நீர்

12. மலர் - தாமரை, கழுநீர்

உரிப்பொருள்

ஊடலும் ஊடல் நிமித்தமும்.

நெய்தல் திணை

முதற்பொருள்

நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்

பொழுது - அ) பெரும் பொழுது - ஆண்டு முழுதும், ஆ) சிறுபொழுது - எற்பாடு

கருப்பொருள்கள்

1. தெய்வம் - வருணன்

2. உணவு - மீன், உப்பு

3. விலங்கு - உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும் எருது), சுறா

4. மரம் - புன்னை , ஞாழல், கண்டல்

5. பறவை - அன்றில், அன்னம்

6. பறை - மீன்கோட் பறை

7. தொழில் - மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு விளைவித்தல், நாவாய் ஓட்டல்

8. யாழ் - நெய்தல் யாழ்

9. பண் - நெய்தல் பண்

10. ஊர் - பட்டினம், பாக்கம்

11. நீர் - உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு

12. மலர் - நெய்தல், கைதை (தாழை)

உரிப்பொருள்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை

முதற்பொருள்

நிலம் - பாலை நிலம்

பொழுது - அ) பெரும்பொழுது - வேனிற் காலம், பின்பனிக் காலம், ஆ) சிறுபொழுது - நண்பகல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் – கொற்றவை

2. உணவு - வழிப்போக்கரிடம் திருடிய உணவு

3. விலங்கு - யானை, புலி, செந்நாய்

4. மரம் - இருப்பை, உழிஞை

5. பறவை - கழுகு, பருந்து, புறா

6. பறை - சூறை கோட் பறை

7. தொழில் - வழிப்பறி, சூறையாடல்

8. யாழ் - பாலை யாழ்

9. பண் - பாலைப் பண்

10. ஊர் - பறந்தலை

11. நீர் - கூவல் (கிணறு, குழி)

12. மலர் - மரா, குரா

உரிப்பொருள்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில் இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு. அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.

மிகுதி அடுத்த வாரம்...