திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் குருவருள்வுடையான் கோத்திரத்தில் சைவ வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும்.[5] இளமையில் சைவ சமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மதத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.
தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்குக் கடுமையான சூலை நோய் (வயிற்று வலி)[5] ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.[5] இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.
பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களைத் தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
சமண சமயத்தைச் சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களைத் திருநாவுக்கரசர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன் அருளால் மீண்டதைக் "கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே" எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தைத் தழுவினான்.
தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் இறைவனடி கலந்தார்.
மிகுதி அடுத்த வாரம்