Nov 222022

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் வரலாறு. பாகம் 1

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் இலங்கை, யாழ் மாவட்டத்தில் இணுவில் தெற்கிலுள்ள மடத்துவாசலில் அமைந்துள்ளது. இக் கோயில் காங்கேசந்துறை வீதியில், யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ 7 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இணுவில் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி மானிப்பாய்க்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ளது. போத்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தை 1620 ஆம் ஆண்டில் கைப்பற்றுவதற்குமுன் அதை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தோற்றம் பெற்றதாகக் கருதப்படும் இந்தக் கோயில் யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் பழைய கோயில்களுள் ஒன்று. இக்கோயிலின் சிற்ப ஓவிய வேலைப்பாடுகள் ஒரு சிறப்பான அம்சமாகும்.

13 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தினர் ஆண்டனர். இவர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டனர். இவர்களில் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரைக் கொண்ட ஒரு மன்னனின் பெயராலேயே இக்கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு பரராசசேகரப் பிள்ளையார் என்றும், கோயில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த மன்னன் பெயரால் இல்கோயிலுக்குப் பெயர் வந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. அம்மன்னன் இக்கோயிலைக் கட்டுவித்ததால் அப்பெயர் ஏற்பட்டது என்றும், அவன் வணங்கிவந்த கோயில் ஆதலால் அவன் பெயரால் கோயில் அழைக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. ஆரியச் சக்கரவர்த்திகளின் மற்றச் சிம்மாசனப் பெயரைக் கொண்ட செகராசசேகரப் பிள்ளையார் கோயிலும் இணுவிலில் இருப்பது குறிப்பிடத் தக்கது.