அன்று ஞாயிற்றுக்கிழமை எங்கள் பூத்தோடடத்திற்கு நீர் ஊற்றிக்கொண்டு இருந்தேன்.அப்போது பூத்தோடடத்தில் அங்கும் இங்குமாக சிட்டுக்குருவிகள் பறந்து கொண்டு இருந்தன. பூக்களில் தேன் உண்ண அவை சுற்றி சுழன்ற வண்ணம் இருந்தன. இக்காட்சி எனது மனதில் கற்பனை உணர்வை ஏற்படுத்தியது.
எனக்கு சிறகு முளைத்தால் எப்படி இருப்பேன் என்று சிந்தித்தேன்.நான் ஒரு பறவை ஆனால் எந்தன் சிறகின் துணை கொண்டு எங்கும் பறந்து செல்வேன். ஆறு, மலைகள் எல்லாம் கடந்து ஆகாய வெளியில் ஆனந்த நடனமிடுவேன். முன்னர் எட்ட நின்று பார்த்த இடங்களை எல்லாம் கிட்டச்சென்று பார்ப்பேன். அதிகாலை வேளையில் எனது இனிய ஓசையால் மக்களை துயில் எழுப்புவேன்.
வயல் வெளிகளிலும் தோட்ட நிலங்களிலும் புகுந்து தானியங்களையும்,பழ வகைகளையும் கொத்தி உண்பேன். என் நண்பர்களுக்குடன் கூடிப் பசுந்தரைகள், கடற்கரைகள் எங்கும் பவனி வருவேன். இயற்கை காட்சிகளைக் கண்டு இன்புறுவேன். எவ்வித கவலையும் இன்றி எங்கும் சுற்றுலா செல்வேன். இப்படி எண்ணிய வண்ணம் இருந்த போது மழைத்துளிகள் என் மேனியில் பட்டன. என் கற்பனை கலைந்தது. மழையில் நனைய வேண்டி ஏற்படுமே என்று எண்ணினேன் உடனே வீடு நோக்கி புறப்பட்டேன். எனது இனிய கற்பனையை நினைத்து நினைத்து இன்புற்றேன்.