Nov 252022

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். சம்பந்தரின் வரலாறு மற்றும் அவரது அற்புதங்களை இத் தொடர் மூலம் பார்ப்போம்..

வரலாறு

கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சோழ நாட்டில்சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர். தாயார் பகவதி அம்மையார்.

இவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை, அம்மா அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பால் ஊட்டினார். அதனைப் பருகிய குழந்தை சிவஞானத்தைப் பெற்றது.

நீராடி முடித்து விட்டு வந்த தந்தை வாயில் இருந்து பால் வடிவதைக் கண்டார். அது பற்றி வினவிய போது, குழந்தை கோயிலைச் சுட்டிக்காட்டித் தோடுடைய செவியன்... என்று தொடங்கும் தேவாரத்தைப் பாடியது என்றும் சொல்லப்படுகிறது.

ஆச்சாள்புரக் கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி பெயர் சொக்கியார்.

திருஞான சம்பந்தரின் வரலாற்றைப் பெரிய புராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விவரித்துள்ளார். இவர் வரலாற்றை முதன்முதல் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்,

`வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்`

எனக் குறிப்பிட்டு அருளியதோடு, தாம் அருளிய தேவாரத் திருப் பதிகங்களிலும் திருஞானசம்பந்தர் பெருமைகளைப் போற்றிப் பாடியுள்ளார்.

ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோளரி என்பன அவரது வேறு பெயர்களில் சிலவாகும். அவர் பதினாறு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து வைகாசி மூல நாளில் நல்லூர் பெருமணம் என்று அறியப்படும் ஆச்சாள்புரத்தில் எழுந்த சிவ சோதியில் கலந்தார்.