ஞானப்பால் உண்டமை
ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர், ஒரு நாள் காலை, தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி, அகமருடஜெபம் செய்தார்.
தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்து அழுதார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும், உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே, பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி, உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
எண்ணரிய சிவஞானத்
தின்ன முதங்குழைத் தருளி
உண்ணடிசில் எனஊட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கண்ணார் அருள்புரிந்தார்.
(பெரிய புராணம் பாடல் 1970)
சிவனடியே சிந்திக்குந்
திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும்
பாங்கினி லோங்கியஞானம்
உவமையிலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாமுணர்ந்தார் அந்நிலையில்
(பெரிய புராணம் பாடல் 1973)
பிரம தீர்த்தில் நீராடிய சிவபாத இருதயர், பால்வழிய நின்ற பிள்ளையைப் பார்த்து “யார் கொடுத்த எச்சிற்பாலை உண்டாய்?” எனக் கோல் கொண்டோங்கினார். உடனே ஞானசம்பந்தர் தமக்குப் பால் கொடுத்த பரம்பொருளை அடையாளங்களுடன் சுட்டித் “தோடுடைய செவியன்” என்ற திருப்பதிகம் பாடினார்.
பொற்றாளம் பெறல்.
திருஞானசம்பந்தர் தில்லை முதலிய பல தலங்களையும் தரிசித்து நடுநாட்டில் உள்ள திருநெல்வாயிலரத்துறை சார்ந்தார். களைப்பினால், மாறன்பாடியில் அமர்ந்து, அன்றிரவு நித்திரை செய்தார். அரத்துறைப்பெருமான் முத்துக்குடை, சின்னம் முதலியவற்றை அருளினார்.
சோதிமுத்தின் சிவிகை சூழ்வந்துபார்
மீதுதாழ்ந்து வெண்ணீற்றொளி போற்றிநின்று
ஆதியா ரருளாதலில் அஞ்செழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்
- பெரியபுராணம் பாடல் – 2119
அவற்றை இறையருளெனப் பெற்ற ஞானசம்பந்தர் “எந்தை ஈசன் எம்பெருமான்” என்ற திருப்பதிகம் பாடிப்பரவினார்.