Dec 102022

திருக்குறள் - அறத்துப்பால் - பாயிரவியல் - அறன்வலியுறுத்தல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

 

பரிமேலழகர் உரை:

[அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். 'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல'(புறநா.31) என்றார் பிறரும்.)

சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.

 

Translation:

It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain?

Explanation:

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?