Dec 152022

சமையுமா ஈழம்!

ஈழத்தின் இமயம் தொட்டு

வாழத்தான் நினைத்தோம்

காலத்தின் சமயம் பார்த்து

ஆளத்தான் இருந்தோம்

 

ஆள்வார் நம் "சமயம்" பார்த்து

போர்வாளை ஏந்தினர்

பௌத்த சமயம் இல்லாத

எம் "சமயம்" பார்த்து

 

பயங்கரவாத முத்திரையில்

எம்முகத்தை திரையிட்டு

பயன்தராத நித்திரையில்

கனவுக்காட்சி திரையிட்டு

 

என்தாயின் மாரறுத்துக்

காமப்பசி தீர்த்துக்கொண்டாய்

பாலுக்குப்பதில் இரத்தத்தால்

எந்தன்பசி தீர்த்தாளவள்

 

அப்பாவின் சிரசின் மீது

துப்பாக்கி உரசிச் சுட்டாய்

அண்ணாவின் முன்னான் நரம்பை

சின்னாபின்னம் ஆக்கிவிட்டாய்

 

கன்னிக் கழியாத்

தங்கை என்னை

எண்ணித் தவியாய்த்

தவிக்க விட்டாய்

 

என்னினத்தின் குருதிச்சூட்டை

துப்பாக்கியால் அளந்தவன்

உன்னினத்தின் இறுதிஏட்டை

பாக்கியின்றி பிளந்திடுவோம்!

 

விழுதுகளில் வேரமைத்து

இனங்காத்த தமிழன்

பழுதுகளை சீரமைத்து

இனங்காட்ட வருவானா?

 

கொன்று குவித்து விட்டதால்

வென்று ஜெயித்து விட்டீரா?

இறப்புக்களின் பிறப்பில்தான்

இருப்புக்கொள்ளும் தமிழினம்!

எண்ணம் சினத்துவிட்டது. கண்கள் கனத்துவிட்டன . இதற்குமேல் எழுதுவதற்கு கையிலும் உறுதியில்லை. மெய்யிலும் குருதியில்லை.