நீங்கள் விரும்பும்படி உங்கள் மனம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா - உங்கள் உடலையும், மனதையும் எப்போதுமே துடிதுடிப்புடன், உற்சாகமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வழி தேடுகிறீர்களா? யோகா, தியானம் செய்ய துவங்கலாம்னு நினைக்கிறேன், ஆனா எப்படி ஆரம்பிக்கறதுனு யோசிக்கறீங்களா? நீங்கள் வந்திருப்பது சரியான இடம். இந்த உடலையும் மனதையும் நமக்கு தேவையானபடி பயன்படுத்தும் இந்த யோக விஞ்ஞானம் எப்படி துவங்கியது, நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றிய முழுமையான தொகுப்புதான் இந்த பதிவு.
யோகா - ஒரு பார்வை.
- யோகா என்றால் என்ன?
- புதிதாக யோகா செய்பவர்களுக்கு எளிமையான ஆரம்ப யோகப் பயிற்சிகள்.
- யோகா நன்மைகள்.
- யோகா செய்தால் எடை குறையுமா?
- யோகாவின் வரலாறு.
- யோகாவின் வகைகள்
- யோகா பற்றி அதிகம் கேட்கப்படும் கேள்வி பதில்கள்.
- எது யோகா இல்லை? (கட்டுக்கதைகளும் உண்மையும்).
- யோகா பயிற்சிகள் - இவற்றை கவனிப்பது முக்கியம்.
- ஈஷா கிரியா.
"உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கும் ஆற்றலை, சுதந்திரத்தை உங்களுக்கு வழங்கும் உள்நிலை விஞ்ஞானமான யோக விஞ்ஞானத்தின் வல்லமையை நீங்கள் உணர வேண்டும் என விரும்புகிறேன்.-சத்குரு"
யோகா என்றால் என்ன? (Yoga in tamil)
சத்குரு: யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது முழுப்பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஒரு பகுதியாக நீங்கள் உணரத் தொடங்கும்போது நீங்கள் யோகத்தில் இருக்கீறீர்கள். யோகா என்பது பயிற்சி அல்ல. உங்கள் உடலை முறுக்கிக்கொள்வது, மூச்சைப்பிடித்துக் கொள்வது, தலையில் நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல. எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணரும்போது யோகா என்று சொல்கிறோம். அதை அந்த நிலையை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருந்தாலும் சரி, அந்த நிலையை அடைவதற்கு ஒரு வழிமுறை பயன்படுமானால் அதை யோகா என்று சொல்ல முடியும்.